“என் திருமணம் எப்போதுன்னு…” நடிகை திரிஷா பகிர்ந்த தகவல்!
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அதையடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகி அவரை முன்னணி நடிகை ஆக்கின.
இதையடுத்து பல ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வரும் அவரின் திருமணம் எப்போது என்ற கேள்வியை பலமுறை ஊடகங்கள் எழுப்பின. அவருக்கும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் அந்த திருமணம் தடைபட்டது.
இந்நிலையில் இப்போது பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “அது எனக்கே தெரியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் நான் சேர்ந்து வாழக்கூடிய ஒரு நபரை பார்க்க வேண்டும். அப்படி ஒரு நபரை நான் இன்னும் பார்க்கவில்லை. திருமணம் செய்துகொண்டு அதன் பிறகு விவாகரத்து செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை” எனக் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு விஜய் 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அப்படி ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருந்தால் குருவி படத்துக்கு பின்னர் 13 ஆண்டுகள் கழித்து விஜய்யும் திரிஷாவும் இந்த படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். இதற்கு முன்பாக கில்லி, திருப்பாச்சி மற்றும் ஆதி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.