அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

Photo of author

By Anand

அமெரிக்கா மீது இந்தியா தாக்குதலா? டிரம்ப் இந்தியா மீது குற்றச்சாட்டு!

வருகின்ற பிப்ரவரி 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இந்திய அமெரிக்கா மீது வர்த்தக தாக்குதல் நடத்துவதாக விமர்சித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பயணத்தில் அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர், அமெரிக்க நிதி மந்திரி ஸ்டீவன் மனுசின், வர்த்தக மந்திரி வில்பர் ரோஸ், வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் உள்ளிட்டோரும் வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, கொலராடோ மாகாணத்தில் நடந்த பிரமாண்ட பிரசார பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில், தான் மேற்கொள்ளவுள்ள இந்திய பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது அந்தப் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது.

நான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு போகிறேன். இந்திய பிரதமர் மோடியை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்திய பயணத்தின் போது நாங்கள் வர்த்தகம் பற்றி பேசப் போகிறோம். அவர்கள் வர்த்தகத்தில் பல்லாண்டு காலமாக நம் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் இந்தியாவில் நம்முடைய பொருட்களுக்கு மிகவும் கூடுதலாக வரியை விதிக்கிறார்கள். உலகிலேயே நமக்கு கூடுதலாக வரி விதிக்கிற நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது.

இந்திய பயணத்தின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இதன் மூலம் பெரியதொரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் நல்ல ஒப்பந்தம் அமையாவிட்டால், மேலும் இதையொட்டிய பேச்சுவார்த்தை மந்தமாகி விடும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நல்ல நட்புறவு, ராணுவ உறவு இருந்தாலும் கூட வர்த்தக உறவில் தொடர்ந்து உரசல்கள் இருந்து கொண்டு தான் வருகிறது.

அதிக வரி விதிப்பது மட்டுமின்றி இந்தியாவுடன் வர்த்தக சம நிலை இல்லை என்றும், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் அவர் இந்தியாவை பற்றி குறை கூறி வருகிறார்.

அமெரிக்க பண்ணை பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. இந்த ஏற்றுமதிக்கு சாதகமாக சந்தை வாய்ப்புகளை இந்தியா உருவாக்கித் தர வேண்டும் என்று அந்த நாடு எதிர்பார்க்கிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை குறைப்பதுடன், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் மீண்டும் இந்தியாவை சேர்க்க வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் எதிர்பார்க்க படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு சாதகமாக எதையும் செய்து கொடுப்பதாக இல்லை.

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தகத்தை டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் அவருடைய இந்தப் பயணத்தின் போது, பெரிய அளவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்து கொள்ளாது என்றே தெரிகிறது.

அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.