அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி ,தஞ்சை ராமநாதன் துளசி வாண்டையார் திருமண வரவேற்பு விழா நேற்றைய தினம் தஞ்சாவூர் அருகே இருக்கக்கூடிய பூண்டி புஷ்பம் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது திருமணத்தின் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்ததால் கட்சி நிர்வாகிகள், மாற்று கட்சி நண்பர்கள், தொண்டர்கள், என்று பலரையும் தினகரன் அழைக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், நேற்று நடைபெற்ற ஜெயஹரிணியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்று கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கிறார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் சகோதரரான ராஜா நேற்று இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுகொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் அவரை இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் உடல்நலம் தொடர்பாக விசாரித்து கொண்டதாக தெரிகிறது.
கடந்த 25ஆம் தேதி மதுரையில் சசிகலா அதிமுகவில் இணைக்கப்படுவது தொடர்பாக அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்த சூழ்நிலையில், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தார்கள்.
ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர் சசிகலாவை அதிமுகவில் இணைப்பதில் தலைமை கழக நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் எந்த விதமான தவறும் இல்லை. அதற்காக கேபி முனுசாமி கூறிய கருத்துக்களில் சில குறிப்பாக ஒருசிலரை தென் மாவட்ட மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாக வைத்து உரையாடி பேட்டிகள் அளிப்பதால் தான் நான் இதை சொல்லுகின்றேன் என்று அக்டோபர் 27 ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் கூறியிருந்தார்.
திருமணத்திற்காக வருகை தந்த டிடிவி தினகரன் அவர்களும் ஓபிஎஸ் எப்போதும் நிதானமாக உரையாற்றுபவர் சசிகலா தொடர்பாக அவர் சரியாக தான் உரையாற்றி இருக்கிறார். அவருடைய கருத்தை நிதானமாக சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது துரோகத்தை வீழ்த்தி அம்மாவின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காகதான் தேர்தல் தோல்வியால் துவண்டு விட மாட்டோம் எங்கள் போராட்டம் தொடரும் என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஓபிஎஸ் அவர்களின் சகோதரர் ராஜா நேற்று தஞ்சை சென்று தினகரனின் சசிகலா அவர்களை சந்தித்துவிட்டு வருகை தந்திருக்கிறார். ஓபிஎஸ் அவர்களின் பேட்டி காரணமாக ஏற்கனவே கொதித்து போயிருக்க கூடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓபிஎஸ் அவர்களின் சகோதரர் ராஜா தஞ்சாவூர் சென்று தினகரனை சந்தித்ததில் மேலும் கடுப்பாகிவிட்டார்.
ஆகவே நேற்றிலிருந்து அதிமுகவின் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களையும் அவரவர் மாவட்டங்களில் இருக்கும் பொது குழு உறுப்பினர்களை அணுகி மிக விரைவில் பொதுக்குழு கூட்டத்திற்காக தயாராகுமாறு சேலத்தில் இருந்து தகவல் போயிருக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. ஓபிஎஸ் அவர்களை நேரடியாக பொதுக்குழுவில் எதிர்த்து குரல் எழுப்புவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன, கட்சிக்குள் ஓபிஎஸ் அவர்களுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நன்கு அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அவரை அனுசரித்து சென்று கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆனாலும் பன்னீர்செல்வம் தொடர்ச்சியாக இவ்வாறு குழப்பம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் மிக விரைவில் பொதுக்குழுவை கூட்டி அதில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் இந்த விவகாரம் சுமூகமாக முடியாவிட்டால் இதே பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் கட்சி ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள தயாராக இருந்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.