நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை அவரது ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்ட நாளில் மாநாடு நடக்குமா அல்லது தள்ளி போகுமா என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என தனது அரசியல் கட்சியை தொடங்கினார்.இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தார்.மேலும் கட்சியின் முதல் மாநாட்டில் கொடிக்கான விளக்கம், கட்சியின் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடு குறித்து விளக்குவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து மாநாடு குறித்த எதிர்பார்ப்பு கூடியது. இந்நிலையில் கட்சியின் மாநாடு நடத்துவதற்காக சேலம் மற்றும் திருச்சியில் சில இடங்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி மாநாடு நடத்த காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். இதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் மாநாடு தள்ளி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜாதக அமைப்பின் படி அடுத்த மாதம் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் நடத்தினால் நன்றாக இருக்கும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அக்டோபர் 3 வது வாரத்தில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அனுமதி பெற காவல்துறையிடம் மனு அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.