TVK: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாத காலங்களில் நடைபெற உள்ளது. ஆனால் எந்த ஒரு கட்சியும் கூட்டணியில் உறுதியாக இருப்பதாக தெரியவில்லை. மாறாக திமுகவில் இருப்பவர்கள் அதிமுகவிலும், அதிமுகவில் இருப்பவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் சேர்ந்து வருகின்றனர். உறுப்பினர்களே உறுதியான நிலைப்பாட்டில் இல்லாமலிருப்பது ஒட்டுமொத்த அரசியல் கட்சியின் நம்பகத்தன்மையை இழக்க வைக்கிறது. அதிலும் உட்கட்சி பூசல் ஒவ்வொரு கட்சியிலும் உள்ளது.
அதற்கு முடிவு எட்டப்படாத நிலையில் பாஜகவை அனைவரும் நாடுகின்றனர். சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்போடும் உள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தங்களுடன் யார் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு என கூறியுள்ளது. ஆனால் தற்போது அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் நாங்கள் தனி பெரும்பான்மையுடன் 30 சதவீத வாக்கு வங்கியில் வெற்றி பெறுவோம் என கூறியுள்ளார்.
அந்த வகையில் இவர்கள் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இது ரீதியாக அவர் பேசுகையில், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றனர். இதில் ஏதேனும் மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் உள்ளது. அதேபோல 40 கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெறும் கட்சியால் மக்கள் நன்மை பெற முடியாது, இனிவரும் நாட்களில் ஏதேனும் நன்மை நடக்க வேண்டுமென்றால் அது தமிழக வெற்றிக் கழகம் வந்தால் தான் முடியும்.
மற்ற கட்சியை காட்டிலும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சேரும் கூட்டம் மிகவும் வித்தியாசமான ஒன்று. மற்றவர்கள் பணத்தைக் காட்டி கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால் இங்கு தன்னெழுச்சியாக கூட்டம் கூடுகிறது. அதேபோல கடந்த 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் 33 சதவீத வாக்குகளுடன் ஆட்சி அமைத்தார். அச்சமயம் நான்கு முனை போட்டி இருந்தது. அதுவே இம்முறை பல முனைப் போட்டி இருந்தும் தமிழக வெற்றிக் கழகம் 35% வாக்கு பெற்று தனி பெருமான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மேலும் மற்ற கட்சியை போல் எங்களுக்கு மத்திய அரசோடும் சமரச செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிறர் கட்சியினர் தங்களின் ஊழலை மறைக்கவே பாஜகவுடன் கைகோர்க்கின்றனர். ஆனால் எங்களின் கொள்கை எதிரியே பாஜக தான். தொடர்ந்து திமுக குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து பேசியும் உள்ளார். இவர் கூறியதைப்போல் தனி பெரும்பான்மையுடன் 35 சதவீதம் அளவில் தமிழக வெற்றிக் கழகம் வாக்கு வங்கியை நிரப்பும் பட்சத்தில் கூட்டணிக்கான அவசியம் அவர்களுக்கு தேவைப்படாது.