தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதில் அதிமுக அல்லது திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாறி மாறி இந்த தொகுதிகளை கைப்பற்றி வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அனைத்த் தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெற்றது. இந்நிலையில்தான், தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழகத்தில் இருக்கும் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
பாராளுமன்றத்தில் திமுகவினர் எண்ணிக்கையை குறைக்கவும், திமுக பலமுடன் இருக்கக் கூடாது என்பதற்காகவே பாஜக இப்படி திட்டமிடுகிறது என திமுகவின் குற்றம் சொன்னார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் அவர் இன்று கூட்டியிருக்கிறார். இந்நிலையில்தான், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நம் அரசியல் சாசனத்தின் 64ஆவது சட்டத் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு 2026ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் ஆண்டிற்கு பிறகு இந்த மறுசீரமைப்புப் பணி, ஒன்றிய அரசால் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எவ்வகையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது பற்றி எந்த ஒரு தெளிவான விளக்கமோ வாக்குறுதியோ மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை.
தற்போதைய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமலோ அல்லது இன்னொரு அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தியோ இந்த மறுசீரமைப்பு நடைபெறலாம். எந்த முறையைப் பின்பற்றினாலும் அதில் மாநிலங்களின் மக்கள் தொகை” என்பது ஒற்றை அளவுகோலாக இல்லாவிடினும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்பது பட்டவர்த்தனமான உண்மை.
கடந்த 50 ஆண்டுகளாகக் கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, தனது மக்கள்தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென்மாநிலங்களுக்கு இது ஒரு பெரும் தண்டனையே அன்றி வேறு இல்லை. ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் இருந்து மட்டும் 8C நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது மற்ற மாநிலங்களை விடக் கூடுதல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
இந்த வேறுபாடு மேலும் அதிகரிக்கக் கூடாது. தென் மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் தொகுதிகள் மேலும் குறைக்கப்பட்டாலோ அல்லது உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு ஒப்பீட்டளவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலோ அது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என குறிப்பிட்டுள்ளார்.