திருவள்ளூரில் விபரீதம் : விநாயகர் சிலையை கரைக்க சென்ற இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

திருவள்ளூர் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற 2 சிறுவர்கள், பூண்டி ஏரி இணைப்பு கால்வாயில் தடுமாறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை, சிறுகடல் பகுதியை சேர்ந்த ஷ்யாம் விக்னேஷ் (13). அதே பகுதியை சேர்ந்த மோனிஷ் (12). விநாயகர் சதுர்த்தியன்று மாலையில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக, பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றுள்ளனர்.

அங்கு, கால்வாயில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கால்வாயில் விழுந்ததில், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள், அலறல் சத்தம் கேட்டு
அப்பகுதி மக்கள் ஓடி வந்து சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.

பின்னர் தீயணைப்புத்துறையினர் தேடியபோது, சிறுகடல் பகுதியில் சிறுவர்களின் உடல்கள் மிதந்தன‌. அவற்றை மீட்ட காவல்துறையினர் , பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.