தேனி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழக கேரளா எல்லையில் உள்ளது மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில். வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளியிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியில் உள்ள பளியங்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் இரு மாநிலங்களில் இருந்தும் சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்த திருவிழா வரும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் அன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு, அதற்க்கு பதிலாக மே 20 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தேனி மாவட்டம், வீரபாண்டியிலுள்ள கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. இந்த கோவிலில் சித்திரை திருவிழாவின் போது மட்டும் 24 மணி நேரமும் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வருடம் சித்திரை திருவிழா மே 9 ஆம் தேதி தொடங்கி மே 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்வையொட்டி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது. அதற்க்கு பதிலாக மே 27 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவில் திருவிழாக்களை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார்.