கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர்.
கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டின் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர். தரை தளத்தில் ஒரு குடும்பம் வாடகைக்கு வசித்து வந்தனர்.
நேற்றிரவு பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து விழுந்ததில் அருகில் இருந்த ஓட்டு வீடும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஸ்வேதா, கோபால் ஆகிய இருவர் உயிரிழந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.