ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

Photo of author

By Parthipan K

ரஜினியை வெளுத்து வாங்குவது ஏன் ? உதயநிதி ஸ்டாலின் மழுப்பல் பதில் !

மறைந்த பத்திரிகையாளர் மற்றும் நடிகர் சோ ராமசாமி அவர்கள் தொடங்கிய துக்ளக் பத்திரிகையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழா சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ’சோ வாசகர் வட்டத்தை உருவாக்க வில்லை அவர் ஒரு இனத்தை உருவாக்கினார்.  ஒருவர் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். ஆனால் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லலாம். சோவை வளர்த்துவிட்டது இருவர்தான். ஒருவர் பக்தவச்சலம் மற்றொருவர் கலைஞர். கலைஞர் துக்ளக்குக்கு இலவச விளம்பரம் செய்வதாகவே என்னிடம் சோ  கூறியிருக்கிறார்.  சோ போன்ற பத்திரிகையாளர்கள் இப்போது மிக மிக அவசியமாக தேவைப்படுகின்றன.  சமுதாயமும் அரசியலும் இப்போது கெட்டு விட்டது.  பாலில் தண்ணீர் கலந்து போல செய்திகளை திரிக்காமல் உண்மையான செய்திகளை பத்திரிக்கையாளர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.’ எனக் கூறினார்.

இதையடுத்து ரஜினியின் பேச்சால் அதிருப்தியான திமுக வினர் அவருக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அதன் உச்சமாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள்’ என கேலியாக பதிவு செய்தார். இதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னதாக ஒரு முறை ரஜினியை வயதான பெரியவர் என்றும் கேலி செய்திருந்தார்.

ரஜினியை இது போல மறைமுகமாக டிவிட்டரில் விமர்சனம் செய்வது ஏன் என உதயநிதியிடம் கேள்வி எழுப்பிய போது ‘நான் என் டுவீட்களில் ரஜினியைதான் குறிப்பிடுகிறேன் என எதை வைத்து சொல்கிறீர்கள். அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லை. அவர் வந்த பின் இந்த கேள்விக்கான பதிலை நான் உங்களுக்கு சொல்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.