உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படத்தலைப்பு ‘கழகத் தலைவன்’?… வெளியான தகவல்
நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி சேலம் மற்றும் ஏற்காடு ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது.
இதுவரை இரண்டு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டைட்டில் ரோலான மாமன்னன் வேடத்தில் நடிகர் வடிவேலு நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. வடிவேலுவின் மகனாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல முக்கியமான எதிர்க்கட்சி தலைவர் வேடத்தில் அழகம் பெருமாள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அவரின் மகனாக ஃபஹத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்பே உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு டைட்டில் ‘கழக தலைவன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் இந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. திமுகவில் உதயநிதி ஸ்டாலின் கட்சியினரால் அதிக முக்கியத்துவம் கொடுத்து அடுத்த தலைவர் அவர்தான் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வரும் நிலையில் ‘கழகத் தலைவன்’ என்ற தலைப்பு வைக்கப்படுவது கூடுதல் கவனத்தைப் பெறுகிறது.