பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் தொடர்பான பல விஷயங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் சில மக்கள் சரியாக அதை கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். அப்போது அந்த கடனை வசூல் செய்வதற்காக வரும் நபர்கள் மிகவும் அநாகரீகமாக பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள் என்கிற புகார்கள் பல வருடங்களாக இருக்கிறது.
இந்நிலையில்தான், தனி நபர்கள், சுய உதவிகுழுக்கள் ஆகியோருக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக கடனை வசூல் செய்தால் சிறைத்தண்டனை வழங்கும் மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருக்கிறார். அதில் உள்ள அம்சங்கள் கீழ் வருமாறு:
கடன் வாங்குவோருக்கும், கடன் வழங்கியவருக்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.
கடன் வழங்கிய நிறுவனம் கடன் வாங்கியவரையோ அல்லது அவரின் குடும்பத்தினரையோ வலுக்கட்டாயமான நடவடிக்கைக்கு உட்படுத்தக்கூடாது. அதேபோல், அவர்களை மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களின் சொத்துக்களை பறிக்கவோ கூடாது. அப்படி செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அபாராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வலுக்கட்டாய கடனை வசூலுக்கும் காரணத்தில் கடன் பெறுபவர் அல்லது அவரது குடும்பத்தில் யாரேனும் தற்கொலை செய்தால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பிணையில் வெளியே வரமுடியாது. கடன் வழங்கும் நிறுவனங்கள் அதை வசூலிக்க முறையான வழிகளை பின்பற்ற வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய, நலிவடைந்த மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்த மசோதாவை தாக்கல் செய்யும் போது உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.