சொன்னது என்னாச்சி?!.. உதயநிதி கட்அவுட் ஆட்டோ மேல விழுந்தாச்சி!.. அதிர்ச்சி வீடியோ!…

தமிழகத்தில் கட் அவுட் கலாச்சாரம் என்பது முடிந்தபாடில்லை. சினிமா, அரசியல் இரண்டிலுமே கட் அவுட் வைப்பது பல வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால், திரைப்படங்கள் மற்றும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதை ரசிகர்கள் விட்டுவிட்டார்கள். ஆனால், அரசியலில் அது இன்னும் நிற்கவில்லை.

இது தொடர்பாக மறைந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், இனிமேல், அரசியல் தொடர்பான கட் அவுட்களை வைக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அரசியல் கட்சிகள் முழுமையாக இதை பின்பற்றுவதில்லை. முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரு விழாவில் கலந்து கொள்ள வரும்போது அவரை காக்க பிடிப்பதற்காக கட்சி நிர்வாகிகள் இதை செய்து வருகிறர்கள்.

இப்படி வைக்கப்படும் பேனர்கள் சில சமயம் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்துவதும் உண்டு. ஒருமுறை எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் இணைந்து வைக்கப்பட்ட பேனர் சென்னை குரோம்பேட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ என்கிற பெண்ணின் மீது விழுந்து அவர் பலத்த காயமடைந்து இறந்து போனார். அப்போது சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல சென்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், அவரி மகன் உதயநிதியும் அவர்களிடம் ‘நாங்கள் எப்போதும் பேனர் வைக்க மாட்டோம். இனிமேல் யாரும் பேனர் வைக்க முடியாத படி நடவடிக்கை எடுப்போம்’ என வாக்குறுதி கொடுத்தார்கள்.

இந்நிலையில்தான், திருவள்ளூரில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த உதயநிதி ஸ்டாலினின் பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்று கனமழை பெய்தபோது காற்று வேகமாக அடித்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இதையடுத்து திமுகவினரை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.