கடந்த மார்ச் இறுதி வாரத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பல கல்லூரி, பல்கலைகழகங்கள் மாணவர்களிடம் கட்டணத்தை வசூலிப்பதில் கடுமை காட்டப்படுகிறது என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் கல்விக் கட்டணங்கள் வசூல் செய்வது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அதில், கொரோனா நோய்த் தொற்றால் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் சில கல்வி நிறுவனங்கள் கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மாணவர்களை நிர்ப்பந்திப்பதாகப் புகார்கள் வருவதாகவும், இத்தகைய கடுமையான சூழலில் மாணவர்களிடம் கல்வி, கட்டணம் வசூலிப்பதில் கடுமை காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.