மாநில பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தல்!

Photo of author

By Parthipan K

மாநில பல்கலைக்கழகங்களும் பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி அறிவுறுத்தல்!

பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து மத்திய பல்கலைகழகங்களிலும் இளங்கலை படிப்புகளில் சேர இனி பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தும் எனவும் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, இந்த மாணவர் சேர்க்கை முழுவதும் பொது பல்கலைகழக நுழைவுத்தேர்வை அடிப்படையாக வைத்தே நடத்தப்படும் எனவும், இதன் காரணமாக 12-ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களும் இனி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு நடத்தி அந்த மதிப்பெண்களைக் கொண்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தி உள்ளது.

பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்வது தொடர்பாக, அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் துணைவேந்தர்கள், இயக்குநர்கள் மற்றும் முதல்வர்களுக்கு யுஜிசி செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,

பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த மாநில உயர்கல்வி நிலையங்கள் முன்வர வேண்டும் என்றும், மாணவர்களுக்கு சம வாய்ப்பு ஏற்படுத்த இந்த பொது நுழைவுத் தேர்வு முறை உதவும் என்றும் பல்கலைகழக மானிய குழு (யுஜிசி) கூறி உள்ளது.

இதற்கிடையே  பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தனது வலைத்தள பக்கத்தில் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் தேர்வுக்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.