2024ம் ஆண்டுக்கான யூஜிசி நெட் தேர்வு திடீரென்று ஒத்திவைப்பு!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வாணையம்!!
2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி நடைபெறவிருந்த யூஜிசி நெட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அவர்கள் தற்பொழுது அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருக்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவும், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.
மேலும் பி.எச்டி படிக்க விண்ணப்பிக்கும் மாணவர்களும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அண்மையில் யூஜிசி அறிவித்து இருந்தது. இதையடுத்து 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி யூஜிசி நெட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று(ஏப்ரல்30) ஜூன் மாதம் நடக்கவிருந்த யூஜிசி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக யூஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதாவது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆகிய பணிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஜூன் மாதம் 16ம் தேதி முதல் நிலைத் தேர்வை நடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே நாளில் நெட் தேர்வு நடத்தப்படவிருந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணங்க நெட் தேர்வை ஜூன் 18ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து யூஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் அவர்கள் “நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி மற்றும் யூஜிசி இணைந்து நெட் தேர்வை ஜூன் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஜூன் 18ம் தேதி செவ்வாய் கிழமை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது. தேர்வு எழுதும் தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுத்து இந்த தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி வந்து யூஜிசி நெட் தேர்வை ஒரே நாளில் ஓ.எம்.ஆர் முறையில் இந்தியா முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேஷ்னல் டெஸ்டிங் ஏஜென்சி வெளியிடும்” என்று அறிவித்துள்ளார்.