புதிய என்ஐடி-களின் நிரந்தர வளாகங்கள் அமைப்புக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல்
புதிய என்ஐடி-களின் நிரந்தர வளாகங்கள் அமைப்புக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
தேசிய தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்கு (என்ஐடி-களுக்கு) புதிதாக நிரந்தர வளாகங்களை அமைப்பதற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22 வரையிலான காலத்திற்கு மொத்த செலவு ரூ.4,371.90 கோடியாக இருக்கும்.
2009 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட என்ஐடி-க்கள் மிகவும் அளவான இடத்தில் குறைவான அடிப்படைக் கட்டமைப்புடன் தத்தம் தற்காலிக வளாகங்களில் 2010-11 கல்வியாண்டிலிருந்து செயல்பாட்டைத் தொடங்கின. கட்டுமானத்திற்குத் தேவையான நில ஆர்ஜிதத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமும் உண்மையான தேவையை விட மிகவும் குறைந்த கட்டுமானப் பணிகளுக்கான செலவு ஒப்புதல் அளிக்கப்பட்டதாலும் நிரந்தர வளாகத் திட்டங்களைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
தற்போது திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதால் இந்த என்ஐடி-க்கள் தத்தமது நிரந்தர வளாகங்களில் 2022 மார்ச் 31 வாக்கில் முழுமையாக செயல்படத் தொடங்கும். இவற்றின் ஒட்டு மொத்த மாணவர் திறன் 6,320 ஆகும்.
என்ஐடி-க்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பயிற்சி அளிக்கும் நிறுவனங்களாக தேசிய முக்கியத்துவம் பெற்றவை. உயர்தரமான தொழில்நுட்பக் கல்வி அளிப்பது இவற்றின் சிறப்பம்சம். நாடு முழுவதும் தொழில் முனைவோரை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் தேவையான உயர்தரமுள்ள தொழில்நுட்பத் திறனாளிகளை உருவாக்கும் திறனை இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளன.