சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்!

Photo of author

By Sakthi

சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ஆகியோர் வரவேற்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சட்டசபைக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் பாஜகவின் தலைமை மிகத் தீவிரமாக இருக்கின்றது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா 2 நாள் அரசு முறை பயணமாக இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை சுமார் பத்து ஐம்பது மணியளவில் தனி விமானம் மூலம் புறப்பட்ட அமித்ஷா மதியம் ஒன்று 40 மணி அளவில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்து சேர்ந்தார். அவருக்கு பாஜக சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல தமிழக முதல்வர், மற்றும் துணை முதல்வர், ஆகியோர் நேரில் சென்று அவரை வரவேற்றார்கள். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, மற்றும் ஜெயக்குமார், செங்கோட்டையன், கேபி அன்பழகன், மாஃபா பாண்டியராஜன், ஆகியோரும் அமித்ஷாவை வரவேற்றனர். இந்த வரவேற்பை ஏற்றுக் கொண்ட உள்துறை அமைச்சர் விமான நிலையத்திலிருந்து காரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கின்ற லீலா பேலஸிற்கு கிளம்பினார். செல்லும் வழி முழுவதும் பாஜக நிர்வாகிகள் கலை நிகழ்ச்சிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.