மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் நேற்று காலமானாா்.

மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் (வயது 74) பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தலித் சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவராக அறியப்பட்டவா் ராம்விலாஸ் பாஸ்வான். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர அரசியலில் செயல்பட்ட ராம்விலாஸ் பாஸ்வான் ஹாஜிப்பூா் மக்களவைத் தொகுதியில் இருந்து 8 முறை எம்.பி.யாகத் தேர்வானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இந்த தகவலை அவருடைய மகன் சிராக் பாஸ்வான் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநில முதல்வர்கள் எனப் பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment