அரசு வேலைக்கு ஆசை காட்டி.. ஆட்டைய போட்ட கும்பல்.! இளைஞர்களே உஷார்.!

Photo of author

By Sakthi

பொதுப்பணித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த வாலிபர்கள் பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய ஒரு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். தலைநகர் புதுடில்லியில் அமித் குமார், ராம் தயாள், குர்திப் ஆகிய மூன்று பேரும் இணைந்து இணையதளம் மூலமாக, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அந்த அந்த விளம்பரத்தை பார்த்த பலர் நேர்முகத் தேர்வுக்காக சென்றனர்.

அப்போது அந்த மோசடி கும்பல் அங்கே அந்த இளைஞர்களிடம் வைப்புத் தொகை கட்ட வேண்டும் என்று கூறி, பணத்தை வசூல் செய்தனர். அவர்களின் பேச்சை கேட்டு அரசு வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில், வாலிபர்கள் பலர் பணத்தை அவர்களிடம் கொடுத்தனர். அந்த வாலிபர்களிடம் இருந்து சுமார் 12 லட்சம் வரை வசூல் செய்த அந்த மோசடி கும்பல் இரவோடு இரவாக அந்த இடத்தை விட்டு தலைமறைவாகி விட்டனர். பின்பு பணத்தை பறிகொடுத்த இளைஞர்கள் காவல் துறையில் புகார் அளித்ததன் பெயரில் அந்த மோசடி கும்பலின் முக்கிய குற்றவாளியான அமித் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த கும்பலை பற்றிய பல உண்மைகள் வெளியானது. அவர்கள் இதுபோன்று பல இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டி இருப்பது தெரியவந்தது. அது மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களில் அரசாங்க வேலை வாங்கி தருவதாக தெரிவித்து அரசாங்க முத்திரையை தவறாக பயன்படுத்தி பல இளைஞர்களை ஏமாற்றி உள்ளதையும் காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். ஆகவே காவல்துறையினர் அமித் குமார் மற்றும் அந்த மோசடி கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.