நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்து இருக்கிறது.
இதுதொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோர் விடுத்திருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் மிக விரைவில் நடக்க இருக்கிறது. இதனை முன்னிட்டு மாநகராட்சி மற்றும் நகராட்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பாக போட்டியிட விருப்பம் உடையவர்கள் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மாவட்ட அலுவலகங்களில் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,000 ரூபாய், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 2500 ரூபாய், பேரூராட்சி பகுதிகளுக்கு 1500 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்கும் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களின் அதற்கான கட்டண ரசீதை மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பணம் செய்து கட்டணம் இல்லாமல் வேறு விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விருப்ப மனு பெறுவது குறித்து அது தொடர்பான விபரங்களை கட்சியை சார்ந்தவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள மாவட்டச் செயலாளர்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், நோய்த்தொற்று தலைப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விருப்ப மனுக்களை பெற வேண்டும் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.