மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

Photo of author

By Parthipan K

மீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

தமிழகத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,607 பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.

எனவே அன்றைய தினம் தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து வாக்குபதிவு நாளன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குபதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (பிப்ரவரி 22-ந் தேதி) எண்ணப்பட உள்ளன.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை உள்பட சில இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டது. பல இடங்களில் வாக்குபதிவு எந்திரம் பழுதானது.

அதனை தொடர்ந்து, கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வாக்குசாவடிக்குள் இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் உடைக்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளால் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஏழு வாக்குசாவடிகளில் மறு வாக்குபதிவு நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தபடி சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஏழு வாக்குசாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குபதிவானது மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், மறு வாக்குபதிவு நடைபெறும் இடங்களில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.