சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா
காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கண் மருந்தைப் பயன்படுத்திய அமெரிக்கர்கள் பலருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பாக சில நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் மீது புகார்கள் எழுந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் இரு இருமல் மருந்தை பயன்படுத்த தடை விதித்துது இந்திய சுகாதாரத் துறைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த குளோபல் பார்மா என்ற நிறுவனம் தயாரித்த கண்சொட்டு மருந்தால் பார்வை பறிபோயுள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது.
சென்னையை சேர்ந்த நிறுவனம் தயாரித்த இந்த சொட்டு மருந்தினை அமெரிக்காவில் பயன்படுத்தி, 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேருக்கு கண்பார்வை பறிபோனதாகவும், 12 பேருக்கு தொற்றுபாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டினை அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த கண் சொட்டு மருந்தினை தொடர்ந்து பயன்படுத்தினால், தொற்று பாதிப்பு அதிகமாகும் என்றும் அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
கண்களில் செயற்கையாகக் கண்ணீரை வரவழைப்பதன் மூலம் விழித்திரை காய்ந்து போகாமல் இருக்க இந்த கண் மருந்து உதவுகிறது. எனினும் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தின் மூலம் அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்படாத கிருமித்தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அசுத்தமான தண்ணீரால் இந்த சொட்டு மருந்து தயாரிக்கப்படுகிறது என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் குற்றஞ்சாட்டி உள்ளது.
எனவே, அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு குழுவானது, இந்த சொட்டு மருந்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு விற்பனையாகாமல் உள்ள கண் மருந்தை மொத்தமாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதன் உற்பத்தியாளரான சென்னையை சேர்ந்த குளோபல் ஃபார்மா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள ஃபார்மா நிறுவனத்தில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குனராக அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் மருந்து சுத்தமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அந்தக் கண் மருந்தின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும் அதன் மூலம் அந்த மருந்தில் எந்தவிதமான தொற்று ஏற்படுத்தக்கூடிய கிருமியோ அல்லது கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மாசுகளோ இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.