ஆப்கானிஸ்தானுக்கு விடிவு காலம் வந்துவிட்டது! அமெரிக்க அதிபர் பரபரப்பு அறிவிப்பு…
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். வானூர்திகளை கடத்திய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் 19 பயங்கரவாதிகள், நியூ யார்க்கில் உள்ள பன்னாட்டு வர்த்தக நடுவமான இரட்டை கோபுரம் மீது, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் உள்ள பெண்கடன் மீதும், பெனிசில்வேனியாவிலும், அடுத்தடுத்து வானூர்திகளை மோத விட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், இரட்டை கோபுரத்தில் மட்டும் 2,750 பேர் கொல்லப்பட்டனர். பென்டகனில் 184 பேரும், பெனிசில்வேனியாவில் 40 பேரும் கொல்லப்பட்டனர். (பெனிசில்வேனியாவில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வானூர்தியை மீட்க பயணிகள் முயற்சித்த போது விபத்துக்காகியது குறிப்பிடத்தக்கது)
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, அல்கொய்தாவை பழி வாங்க ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படையும் ஏராளமானோர் குவிக்கப்பட்டு, அல்கொய்தாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை கண்டுபிடிக்க அமெரிக்க ராணுவம் அடிக்கடி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வந்தது. அதன் பலனாக 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை கண்டுபிடித்த அமெரிக்க ராணுவம், ரகசியமாக அந்நாட்டிற்குள் புகுந்து மே 2 ஆம் தேதி ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்றது.
தாக்குதலுக்கு பழி வாங்கிய பிறகும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பிரச்சனையால் படைகளை ராணுவம் திரும்பப் பெறாமல் இருந்து வந்தது. அவ்வப்போது தாலிபான்களுடன் நடக்கும் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பது அந்நாட்டு தலைவர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
படைகளை திரும்பப் பெறுவது குறித்து தாலிபான்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து படிப்படியாக படைகளை திரும்பப் பெறுவது என டிரம்ப் முடிவெடுத்தார். அதன்படி, படைகளை திரும்பப் பெறாவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என தாலிபான் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடன் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளார். அதாவது, அல்கொய்தா நடத்திய தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாளின் போது அனைத்து அமெரிக்க படைகளும் திரும்பப் பெறப்படுவார்கள் என அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தற்போது ஆப்கானிஸ்தானில் 2,500 அமெரிக்க வீரர்களும், 7,000 நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வீரர்களும் அங்கு உள்ளனர். அவர்கள் அனைவரும் திரும்பப் பெற்றவுடன், ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு பிரச்சனைகளுக்கு அவர்களாகவே தீர்வு காணுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தாலிபான்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.