மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது; மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து உத்தவ் தாக்ரே கருத்து

0
132

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கிய சம்பவம், நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்து உள்ளார்.


இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது “ டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது முகமூடி அணிந்து சென்று தாக்குதல் நடத்தியவர்கள் கோழைகள். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலை எனக்கு நினைவுபடுத்துகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட வேண்டும். நாட்டில் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணருகிறார்கள். குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களை டெல்லி போலீசார் கண்டுபிடிக்க தவறினால் அவர்களும் கோர்ட்டு கூண்டில் நிற்பார்கள்.


மராட்டியத்தில் இதுபோன்ற சம்பவத்தை அனுமதிக்க மாட்டோம். இங்கு மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மாணவர்களை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஊக்கப்படுத்த மாட்டேன். டெல்லி சம்பவத்தை கண்டித்து மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் கோபம் எனக்கு புரிகிறது. அவா்களை பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ளமாட்டேன். மாணவா்களின் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று சிலா் கோரிக்கை விடுப்பது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘‘தாக்குதலில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்குவது தற்போது அவசியமற்றது” என்று கூறினார்.

Previous articleManaiyadi Sasthiram 2024 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024
Next articleகருப்பு நிறமாக மாறிய டெஹ்ரான் நகரம்; கதறி அழுத மூத்த தலைவர் !!! டிரம்ப் தலைக்கு 536 கோடி பரிசு ??? உலகின் தலைப்பு செய்தியாகும் ஈரான்