முதல் பாகத்தோடு சந்திரமுகி 2 படத்துக்கு இருக்கும் தொடர்பு… வடிவேலு கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்
சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை பி.வாசு இயக்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் சென்னை சாந்தி திரையரங்கில் 890 நாட்கள் ஓடியது. ரஜினியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இதையடுத்து இப்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. சந்திரமுகி2 வில் ரஜினிக்குப் பதில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் வடிவேலு இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் RRR ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார். தற்போது படப்பிடிப்பு தொடங்கி முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தற்போது படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் வடிவேலு முதல் பாகத்தில் நடித்த முருகேசன் என்ற அதே கதாபாத்திரத்தில்தான் நடிக்க உள்ளாராம். முதல் பாகத்தில் நடித்தவர்களில் வடிவேலு மட்டுமே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலானது வடிவேலு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.