சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 24ம் தேதி வெளியான படம் கேங்கர்ஸ்.
தலைநகரம், வின்னர், நகரம் மறுபக்கம் போன்ற படங்களில் இருவரின் கூட்டணியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் நடித்த தலைநகரம் ஆகிய 2 படங்களிலும் வடிவேல் காமெடி காட்சிகள் இப்போதுவரை ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
பல வருடங்களுக்கு பின் சுந்தர்.சி வடிவேல் காமெடி கேங்கர்ஸ் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது. இந்த படத்தை சுந்தர்.சியே இயக்கியிருக்கிறார். இருவரும் மீண்டும் இணைகிறார்கள் என செய்தி வெளியான போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிற துவங்கியது. இந்த படத்தில் மைம் கோபி, முனிஸ்காந்த், கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்.
ஒரு கிராமத்தில் இருக்கும் பள்ளியில் வடிவேலு பி.டி ஆசிரியராக இருக்க அங்கு சுந்தர்.சியும் பி.டி.ஆசிரியராக வருகிறார். அந்த பள்ளியில் படித்த ஒரு சிறுமி காணாமல் போக ஆசிரியை புகார் கொடுக்க அதுபற்றிய விசாரணையும் துவங்குகிறது. அங்கு ரவுடிசம் செய்து கொண்டிருக்கும் குரூப்பை பார்த்து சுந்தர்.சி பொங்க என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
வில்லனிடம் இருக்கும் 150 கோடி பணத்தை வடிவேலு உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க நினைக்கிறார் சுந்தர்.சி. இது தொடர்பாக நடக்கும் காமெடி கலாட்டாதான் கேங்கர்ஸ் படம். இந்நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முதல் நாளில் இப்படம் 60 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு ‘எங்களுக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. அந்தளவுக்கு படத்துக்கு வரவேற்பு இருக்கு. இந்த சம்மருக்கு நீங்க எங்கேயும் டூர்லாம் போக தேவையில்லை. இந்த படத்தை பார்த்தாலே போதும். குழந்தைங்க முதல் பெரியவங்க வரை எல்லோரும் மனசு விட்டு சிரிக்கலாம். சிரிப்பு மட்டுமில்ல. இதுல நல்ல கதையும் இருக்கு’ என பேசியிருக்கிறார்.