கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

0
213

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இதுபற்றிய தகவலைக் கண்டறிந்தவுடனேயே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு, ‘டிட்ராக்’ எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக சில தனியார் சைபர் அமைப்புகளும் கூறியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையக் கணினியிலிருந்து அணு உலைகள் குறித்த ரகசியத் தகவல்களை, ‘டிட்ராக்’ வைரஸை உருவாக்கியவருக்கு அனுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குறைந்த அளவு நீராவி உருவாக்கம் எனும் காரணத்தைச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதற்குக்கூட இந்த ‘டிட்ராக்’ வைரஸ் தாக்குதல்தான் காரணம் என்று புக்ராஜ்சிங் மற்றும் சில தனியார் சைபர் நிபுணர்கள் ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் இதனை மறுத்து, கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் தனித்துவமானது. அதனை வெளியிலிருந்து எவரும் ஹேக் செய்யவோ, சைபர் தாக்குதல் நடத்தவோ முடியாது” என்று விளக்கம் அளித்தது.

ஆனால் நேற்று அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல், இந்திய அணு மின்சக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், கூடங்குளம் அணு உலை இணையதளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவின் தென் கோடி மாநிலமான, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் உலைகளால் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அண்டை நாடுகளின் ராணுவ இலக்காக ஆகக் கூடிய அபாயம் கூடங்குளம் அணு உலைக்கு இருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நான் சுட்டிக்காட்டி வருகின்றேன்.

ஆனால் மத்திய – மாநில அரசுகள் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இருப்பது மட்டுமல்ல, அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கவும் திட்டமிடுவது தென் தமிழக மக்களின் மீது நெருப்பை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.

தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Previous articleஅரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு
Next articleமோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!