வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி தலையை வெட்டுவோம் என கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை கைது செய்ய வேண்டி நேற்று தமிழகம் முழுவதும் வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகிலுள்ள மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பாமக தொண்டர் செல்லத்துரை தமது சகோதரியின் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது வழியில் பு.உடையூர் கிராமத்தின் வழியாக அவர் செல்லும் போது சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அதை பார்த்த இவர் அவர்களை வழியை விட்டு ஓரமாக நின்று மது அருந்துமாறு கூற இதைக் கேட்ட அவர்கள் எங்களுக்கே அறிவுரையா என அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர் பாமகவை சேர்ந்தவர் என்பதை அறிந்து மனிதாபிமானமே இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரக்கத்தனமாக தாக்கியுள்ளனர். அவர் சட்டையிலிருந்த வன்னியர் சங்க குறியீட்டை மிதித்து தாக்கும் வகையில் எடுக்கப்பட்ட வீடியோவை எதோ சாதனை போல அவர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது அவர்களின் கோர முகத்தை காட்டுகிறது.
இதனைத்தொடர்ந்து பாமகவினர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதே நேரத்தில் வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி மற்றும் பாமக மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் பாதிக்கப்பட்ட தொண்டரின் சொந்த ஊருக்கு சென்று அவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவும், கொலை முயற்சியாக வழக்கு பதியவும் வலியுறுத்தியிருந்தனர்.
இது வழக்கமாக பாதிக்கப்பட்ட கட்சி அல்லது சங்கத்தின் சார்பாக அனைவரும் செய்யும் அடிப்படை உதவியே. ஆனால் இதைக் கூட சகித்துக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இதற்கு எதிராக புவனகிரியில் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டம் போட்டு வன்னியர் சமூக மக்களுக்கு எதிராகவும், அச்சுறுத்தும் வகையிலும் மேலும் வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் விசிக மாவட்ட செயலாளர் தமிழொளி, கடலுார் துணை மேயர் தாமரைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லப்பன், பெண் நிர்வாகி செல்வராணி மற்றும் நிர்வாகிகள் அறிவுடைநம்பி, நீதிவள்ளல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது பேசிய அவர்கள் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் தலையை எடுப்போம் என்றும், இது திருமா காலம் இன்னும் 42 ஆண்டுகளுக்கு நாங்கள் வன்னியர்களை அடிப்போம், அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலும், சாதிக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ளனர்.
இதற்கு தமிழக அரசோ காவல்துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் வன்னியர் சங்க தலைவருக்கே கொலை மிரட்டல் விடுத்த நிலையில் பாமக தலைமையும் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தது.மாவட்ட அளவில் இந்த விவகாரத்தை கையாளலாம் என தலைமை நினைத்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரிதாக ஆரம்பித்தது.
அந்த வகையில் வன்னியர் சங்க மூத்த நிர்வாகிகள் மற்றும் பாமக தொண்டர்கள் என பலரும் வன்னியர் சங்கத்துக்கு அதிகாரமிக்க தலைவர் வேண்டும் என்றும், அவர் ஆக்டிவாக செயல்படும் நபராக இருக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் மாவீரன் என்று பாமக மற்றும் வன்னியர் சமூக மக்களால் அழைக்கப்படும் மறைந்த காடுவெட்டி குரு இருந்திருந்தால் விசிகவினர் இப்படி பேச முடியுமா என்றும் அவர்கள் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் கொட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் நிலைமை கையை மீறி செல்வதை உணர்ந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இதைக்கண்டித்து அறிக்கை வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கெடுவையும் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் பெரும்பாலான இடங்களில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணத்திற்கு பிறகு வன்னியர் சங்கம் செயல்படவில்லை என பரவலாக அக்கட்சியினர் மத்தியில் பேசப்பட்ட நிலையில் இந்த விவகாரம் அதை உறுதி செய்கிறதோ என்ற சந்தேகமும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பாமகவை அனைத்து சமூக மக்களும் ஆதரிக்க வேண்டும், வன்னியர்களும் பட்டியலின மக்களும் நட்புடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சி தலைமை வழிநடத்தி செல்லும் நிலையில் அக்கட்சியை மீண்டும் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், சாதீய வட்டத்தில் அடைப்பதற்கான சூழ்ச்சியில் விசிகவை அரசியல் எதிரிகள் பயன்படுத்துவதாகவும் பெரும்பாலோனோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.