வன்னியர் சமுதாயத்தினரையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக வெளியான தகவலை மறுத்திருக்கிறார் தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்.
வன்னியர் சமுதாயத்திற்கு கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில், 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. அன்புமணி ராமதாஸ் முதலமைச்சரிடம் இது தொடர்பாக மனு அளித்த நிலையில், அதனை ஏற்று முதல் கட்டமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை காலம் தாழ்த்தும் நடவடிக்கை என்று விமர்சனம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இட ஒதிக்கீடு வழங்காவிட்டால் தானே போராட்டத்தில் இறங்குவேன் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கின்றார். இதற்கிடையே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்ததாக பாட்டாளி மக்கள் கட்சியினர் குற்றம்சாட்டி அவரை விமர்சனம் செய்து வந்தார்கள்.
இதற்கு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று பதில் தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, வன்னியர் சமுதாயத்தினருக்காண இட ஒதுக்கீட்டிற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக தவறான கருத்துக்களை சிலர் பரப்பி வருவது மிகுந்த வேதனை தரும் விஷயமாக இருக்கின்றது. இது முற்றிலுமாக உண்மைக்குப் புறம்பான கருத்து இதனை பொதுமக்கள் யாரும் நம்பிவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.