2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் நோக்கில் பாமக மீண்டும் வன்னியர் உள்இடஒதுக்கீட்டு போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக திமுக அரசு பல திசைகளிலும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.
பாமகவில் உள்கட்சி சிக்கல்கள் இருப்பதாக பேசப்பட்டாலும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாமக தயாராகியுள்ளது.
பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா?
தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயம், சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களே. சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் மேடையேற்ற முயற்சித்தாலும், அது நடக்கவில்லை. அவர் அதிமுகவுடனான கூட்டணியை மட்டுமே உறுதி செய்துவிட்டு புறப்பட்டார்.
இந்நிலையில், இதற்கு முன் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்ட பாமக, தற்போது எந்த கூட்டணியில் இணையப்போகும் என்பதை தெளிவுபடுத்தவில்லை. திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதாலேயே, பாமக NDAவா, இல்லையெனில் தனியே தானா என்பது குறித்து யூகங்கள் எழுகின்றன.
இந்நிலையில் ராமதாஸ் அதிமுகவுடன் செல்ல விருப்பமுள்ளதாகவும், அன்புமணி ராமதாஸ் பாஜகவுடன் செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து தற்போது அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாமக எப்போது வேண்டுமானாலும் அதனை உறுதிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 – தனி அணியா! ராமதாஸ் திட்டம் என்ன?
ஆனால் பாமகவில் இருந்து வரும் தகவல்களின்படி, ராமதாஸ் தனித்து போட்டியிடும் பிளானில் இருப்பதாக கூறப்படுகிறது. 2021 ல் தனித்து போட்டியிட்ட பாமக 4 சட்டமன்ற இடங்களை பெற்றது. ஆனால் கூட்டணியில் சென்றபோது 5 இடங்களையே பெற்றது. எனவே தனியே போட்டியிட்டு கணிசமான வெற்றியை காணலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வன்னியர் உள் இடஒதுக்கீட்டு போராட்டம் மீண்டும்?
2021 தேர்தலுக்கு முன்பு பாமக வன்னியர்களுக்காக 10.5% உள்இடஒதுக்கீட்டை கோரி போராட்டம் நடத்தியது. அப்போது சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் ஆளும் அதிமுகவுக்கு இது பலத்த நெருக்கடியை உண்டாக்கியது. இதனால் அதிமுக அரசு உடனடியாக அந்த இடஒதுக்கீட்டை அறிவித்தது.
2021 தேர்தலில் இதனால் அதிமுக-பாமக கூட்டணிக்கு வன்னியர் வாக்குகள் திரண்டன. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. 2026 தேர்தலை முன்னிட்டு பாமக மீண்டும் இந்த விவகாரத்தை எடுத்து திமுக அரசுக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த வன்னியர் உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதை அவ்வப்போது பாமகவினர் விமர்சித்து வந்துள்ளனர்.
இந்த உள்இட ஒதுக்கீட்டை எதிர்த்து தென் மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்துக்கு எதிராகவும், வட மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகமாக அனுபவித்து கொண்டிருப்பதாகவும் திமுக தலைவர்கள் பேசியுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழக்கு மூலம் உள்இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட பின்புலமாக திமுக வழக்கறிஞர்கள் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரங்களை மக்கள் மத்தியில் எடுத்து சென்றால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்ட திமுகவுக்கு பெருத்த அடி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை சிக்கலில் திமுக?
இந்நிலையில் பாமக போராட்டத்தை அறிவித்தால் அதை திமுக அரசு எப்படி கையாளும் என்பது முக்கியம். போராட்டத்தால் சாலை மறியல் உள்ளிட்டவைகளால் பொது மக்கள் பாதிக்கப்பட்டால் அது திமுகவுக்கு எதிராகப் போகலாம்; அதேபோல் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் திமுக அரசு வன்னியர்களுக்கு எதிரானது என்ற விமர்சனத்தை பாமக ஏற்படுத்தும்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குழுக்கள் எதிர்ப்பு?
மேலும், வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கினால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பிற சமூகங்களின் எதிர்ப்பு உருவாகும். எனவே, எந்தவிதமாக பார்த்தாலும் இந்த விவகாரத்தில் பாமக, திமுக அரசுக்கு கடுமையான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவுள்ளது என்பது தெளிவாகிறது.
அதே நேரத்தில் இதற்கு திமுக அரசு எவ்வாறு பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.