நடைமுறைக்கு வந்த வன்னியர் உள் ஒதுக்கீடு! மகிழ்ச்சி தெரிவித்த மருத்துவர் ராமதாஸ்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பாக மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார்.இதனையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இறுதியில் குறைந்தபட்சம் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே கூட்டணி குறித்த பேச தயார் என்று தடாலடியாக கூற அதிமுக தலைமை பேச்சு வார்த்தைக்கு தயாரானது.பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தது.
இது அரசியல் நாடகம்,ஆளுநர் கையெழுத்திட்டால் தான் சட்டமாகும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் ஒரு சில தினங்களில் மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட்டு அதிர்ச்சியளித்தார்.இதனையடுத்து இது தற்காலிக சட்டம் தான் என்று திமுக தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆரம்பம் முதல் எதிராகவே பேசி வந்த திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் இது தொடருமா என்ற சந்தேகம் வன்னியர் சமுதாயத்தினர் மத்தியில் எழுந்தது.ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு அம்பேத்கார் சட்ட பல்கலை கழகம் வெளியிட்ட அறிவிப்பில் MBC(V) என்ற வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.இதனையடுத்து இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
1.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம் கல்வியில் வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
— Dr S RAMADOSS (@drramadoss) May 13, 2021
வன்னியர்களுக்காக இட ஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்துதல், பிற சமுதாய மக்களுக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு பெற்றுத் தருதல் ஆகியவை தான் நமது இலக்குகள் ஆகும். இந்த இலக்குகளை நோக்கிய நமது சமூகநீதி பயணம் தொடரும்; வெற்றியும் நம் வசமாகும்! என்றும் தெரிவித்துள்ளார்.