
சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது.
அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் தொடருவும் முடியாமல் முடிவு செய்த செங்கோட்டையன் எடுத்த அஸ்திரம் தான் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை. இந்நிலையில் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கியதும் தற்போது தவெகவில் இணைந்து புதிய வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல பெருந்தலைகள் அதிமுகவிலிருந்து வெளியேறும் என்று தகவல்கள் கசிந்தன.
இந்த பட்டியலில் மீண்டும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி மற்றும் வட தமிழகத்தை சேர்ந்த சிவி சண்முகம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அந்த வகையில் நாமக்கல்லை சேர்ந்தவரான தங்கமணி விரைவில் அதிமுகவிலிருந்து வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.அதிமுக தீர்மான குழுவில் இவர் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் எடப்பாடி ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய அஞ்சலி கூட்டத்தில் இவர் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். மேலும் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் பொதுக்குழு கூட்டத்தில் எதாவது நடக்க வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.
அதே போல வட தமிழகத்தை சேர்ந்தவரும் வன்னியர் வாக்கு வங்கியின் அடையாளமாக விளங்கும் சிவி சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தனியாக அஞ்சலி செலுத்தியுள்ளது அவருடைய அதிருப்தியை வெளிக்காட்டுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும் பொது டிசம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக சிவி சண்முகம் தன்னுடன் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகள் பெரிதும் உதவின. குறிப்பாக ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சூழலே நிலவியது. இந்நிலையில் தான் தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகளும் கொங்கு மண்டலத்தில் உள்ள கொங்கு வெள்ளாளர் வாக்குகளும் அதிமுக ஆட்சியை காப்பாற்ற உதவின.
இதுவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளை வைத்து பார்க்கும் போது உறுதியாகும். அதிமுக வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகள் வன்னியர்கள் அதிகமாக உள்ள வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டத்தில் அடங்கும். இந்நிலையில் சிவி சண்முகம் தனது சமூக ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தியது அவருடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை உணர்த்துகிறது.
மூத்த தலைவர்களின் அதிருப்திக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் அவர்களின் அதிகாரத்தை குறைத்ததே மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்தில் தன்னுடன் கட்சியில் செல்வாக்குடன் இருந்த முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்டுவது, அவர்களுக்கான அதிகாரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து செல்வாக்கை குறைப்பது, தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை கட்சிக்குள் மறைமுகமாக நியமனம் செய்வது உள்ளிட்ட பல காரியங்கள் மூத்த தலைவர்களுக்கு எதிராக நடைபெற்று வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த போது சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர்களை எதிர்த்து இவருக்கு ஆதரவாக நின்ற சிவி சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் தங்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக இவர்கள் கடுமையாக விமர்சித்த பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது, அவர்கள் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்டவை இவர்களின் அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த வகையில் வடக்கில் வன்னியரும், மேற்கில் கொங்கு வெள்ளாளரும் சேர்ந்து அதிமுகவில் அடுத்த புயலை கிளப்ப தயாராகி விட்டனர் என்று அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.
