விசிகவுக்கு 6 தொகுதி ஒதுக்கீடு! எதிர்ப்பு தெரிவித்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைக் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், அவர்கள் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி உருவாகலாம் என பேசப்பட்டது.
அதற்கு இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். இந்நிலையில், விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
இதனால் கொந்தளித்த அக்கட்சியினர், சென்னை அசோக் நகரில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முக்கிய காரணம், 12 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பொது சின்னம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அப்படி 12க்கு குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால், ஒவ்வொரு தொகுதிக்கும் தனி சின்னம் ஒதுக்கப்படும். இதனால் மக்கள் குழப்பமடைவார்கள், ஓட்டு கேட்டு செல்லும் போது குழப்பம் ஏற்படும் என்பதால் 12 தொகுதி வாங்க வேண்டும் என விசிகவினர் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என திருமாவளவனும், கட்சி நிர்வாகிகளும் உறுதிப்பட தெரிவித்ததால் வேற வழியின்றி விசிகவினர் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர். இப்படி முடிவு எடுத்தால் எப்படி ஓட்டு கேட்டு செல்வது? எங்களுக்கே குழப்பம் வரும், பிறகு எப்படி மக்கள் குழம்பாமல் ஓட்டு போடுவார்கள் என கூட்டத்தில் இருந்த சிலர் புலம்பினர்.
இதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்திய திருமாவளவன், கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இறுதியில் 6 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், திமுக தலைவர் ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். போட்டியிடும் தொகுதிகளில் பொதுத்தொகுதி உள்ளதா? என்பது குறித்து பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அனைத்தும் தனித்தொகுதிகளா? அல்லது 4 தொகுதிகள் தனித்தொகுதிகளாகவும், 2 தொகுதிகள் பொதுத்தொகுதிகளா? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. திமுகவைப் பொறுத்தவரை தனித்தொகுதிகளைத் தான் ஒதுக்கும் என பரவலாக பேசப்படுகிறது.