பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

Photo of author

By Anand

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம்

நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ்,மதிமுக,விசிக, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.அப்போது காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற சிறிய கட்சிகள் அனைத்தும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக நிபந்தனை விதித்தது.

அதன்படி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்ட பாரிவேந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், மதிமுக சார்பாக போட்டியிட்ட கணேசமூர்த்தி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் உள்ளிட்டோர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.அந்தவகையில் ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் அதன் தலைவர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள  ரவிக்குமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது தான் ஒரு திமுக உறுப்பினர் எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு மட்டும் தான் தொடர முடியும் என்றும்,பொதுநல வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அடிப்படையில் தனக்கெதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மதிமுகவின் சார்பாக ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கணேச மூர்த்தி பதில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதில் அவரும் தேர்தலுக்கு முன்னதாகவே தான் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து விட்டதாக பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதவிக்காக சொந்த கட்சியை விட்டு கொடுத்து திமுகவிற்கு பல்டியடித்த இவரை எதிர்த்து பயந்துட்டயா குமாரு? என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.