சியான் விக்ரம் நடித்து உருவான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் இன்று காலையிலேயே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால், ஓடிடி உரிமையை பலருக்கும் கொடுத்து தயாரிப்பாளர் சொதப்பியதால் இந்த படத்தில் பண முதலீடு செய்திருந்த இரண்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகவில்லை. அதிலும் இன்னும் 4 வாரங்கள் கழித்தே படம் வெளியாக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஓடிடி உரிமையை 2 நிறுவனங்களுக்கு கொடுத்தது மட்டுமில்லாமல் சியான் விக்ரமுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியான 7 கோடிக்கும் அவரிடமும் ஓடிடி உரிமையை தயாரிப்பாளர் கொடுத்திருக்கிறார். ஆனால், முதல் B4U நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதுமே தன்னிடமிருந்த ஓடிடி உரிமையை சியான் விக்ரம் அவர்களுக்கு கொடுத்துவிட்டார்.
அதுபோக IVY என்கிற நிறுவனமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர படம் வெளியாகுமா ஆகாதா என்கிற சந்தேகத்தையே உண்டாக்கிவிட்டது. ஒருபக்கம், தனக்கு சம்பள பாக்கி இருந்தபோதும் மேலும் தனது சம்பளத்தில் சில கோடிகளை விட்டு கொடுத்திருக்கிறார் விக்ரம். அதோடு அருண், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் தங்களின் சம்பள பணத்தில் சில கோடிகளை விட்டு கொடுக்க பிரச்சனை தீர்க்கப்பட்டு இன்று மாலை 5.30 மணிக்கு தமிழகத்தில் முதல் காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே காலை முதல் தியேட்டரில் காத்திருந்த விக்ரம் ரசிகர்களிடம் இயக்குனர் அருண் மன்னிப்பு கேட்டு வீடியோவும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.