செந்தில் பாலாஜி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Sakthi

சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற காய்கறி சந்தைகள் அனைத்தும் இன்று முதல் மூடப்படுகின்றது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இனி நடமாடும் வாகனங்கள் மூலமாக மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் சேலம் உருக்காலை இல் அமைந்திருக்கின்ற நோய்த்தொற்று சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்ய இருப்பதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நோய் தொற்று சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.

அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த செந்தில்பாலாஜி சேலம் மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறை உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை ஆகிய நான்கு துறைகளையும் நோய் தொற்று தடுப்பு பணிகள் முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களாக திகழ்ந்து வரும் உழவர் சந்தைகள் மற்றும் தனியார் காய்கறி சந்தைகள் போன்ற இடங்கள் ஊரடங்கு முடிவுறும் வரையில் முழுமையாக மூடப்படும் என்று தெரிவித்த அவர், மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் சார்பாக நடமாடும் காய்கறி வாகனங்கள் தயார் செய்யப்பட்டு அவற்றின் மூலமாக காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் முழுவதும் 177 மண்டலங்கள் என பிரிக்கப்பட்டு ஒரு மண்டலத்திற்கு இரண்டு குழுக்கள் என்று மொத்தமாக 354 குழுக்கள் இந்த நோய் தடுப்பு பணிகள் குறித்த பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் நேரடியாக சென்று நோய்தொற்று பாதித்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய உதவிகளை செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் சென்ற 13ஆம் தேதி 13.32 சதவீதமாக இருந்த நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் அரசின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக, 10.9 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதனை விரைவில் பூஜ்யமாக மாற்றுவோம். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார்.