எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்!

Photo of author

By Vijay

எதிர்கட்சி துணை தலைவர் பதவி! சபாநாயகர் பாரபட்சம்! 
 தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த நிலையில், கடைசி தினமான நேற்று காவல் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சம்பந்தமான மானிய கோரிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
இதனிடையே கடந்த சில வாரமாக அதிமுக பொதுக்குழு வழக்கு சம்பந்தமாக அக்கட்சியினரிடையே பரபரப்பு நிலவி வந்தது. சென்னை உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தும், இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கி எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பினை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் நிரந்தரமாக நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும் மற்றும் அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக சட்டமன்ற கொரடா வேலுமணி சபாநாயகர் அப்பாவுவிடம் மனு அளித்தார்.
வேலுமணி அளித்த மனுவிற்கு சபாநாயகர் எந்த பதிலும் அளிக்காததால், சட்டமன்ற வளாகத்தில் கே .பி .முனுசாமியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இன்று காலை சபாநாயகரை சந்தித்து நேற்றைய இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும், எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் எங்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
திமுக எதிர்க் கட்சியாக இருந்த போது முன் வரிசையில் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகிலேயே சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை வழங்கி அமர வைக்கப்பட்டனர். பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை வழங்க மறுக்கிறார்கள்.
எங்களது சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் கோரிக்கையை சபாநாயகர் ஜனநாயக முறைப்படி அங்கீகரிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் எங்களை விட குறைவான உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் அவர்களுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கி முன் வரிசையில் அமர வைத்துள்ளார்.
பொது கணக்கு குழு தலைவர் பதவி எப்போதும் பிரதான சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படும். எங்கள் ஆட்சியில் கூட அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. அதேபோல இந்த முறை பொது கணக்கு குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்க வலியுறுத்தினோம்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கேபினட் அந்தஸ்துள்ள பதவியாகும். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் பல்வேறு கோரிக்கைகளை கூறுகிறார். ஆனால் அதை நேரலை தருவதில்லை. மக்கள் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி பேசுவதை youtubeஇல் நேரலை செய்யாததை கண்டித்து தொடர்ந்து பத்தாவது நாளாக அதிமுக வெளிநடப்பு செய்தது.

தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, கொடநாடு கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஐஜி தலைமையிலான விசாரணை 90% முடிந்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு திமுக அரசு மாற்றியிருப்பதாக தெரிவித்தார். கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் வாதாடி ஜாமீன் பெற்று கொடுத்ததாகவும், மேலும் கொடநாடு வழக்கை காட்டி திமுக அதிமுகவை மிரட்ட பார்ப்பதாக கூறினார்.