நயன்தாரா வாடகைத்தாய் விவகாரம்… நாளை அறிக்கை… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!
நயன்தாரா விவகாரத்தில் சேகரிக்கப் பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை நாளை மாலை வெளியாகும் என அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது.குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன.
இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழ்ந்தை பெற்றுக்கொள்ள பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது திருமணமான தம்பதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால்தான் வாடகைத் தாயை அணுக முடியும். மேலும் வாடகைத் தாயாக வருபவர் தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு ரத்த சொந்தமாக இருக்கவேண்டும். அதையெல்லாம் மீறிதான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையடுத்து இது சம்மந்தமாக மக்கள் நலவாழ்வுத்துறை சார்பாக மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மருத்துவமனை நிர்வாகம் விதிமுறைகளை மீறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் “இந்த விசாரணை சம்மந்தமான அறிக்கை நாளை மாலை வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக விசாரணைக் குழுவிடம் தெரிவித்திருந்தனர். நேற்று குழந்தைகளோடு வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.