அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க விஜயதாரணி வலியுறுத்தல்
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு தங்களுடைய தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது, ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது ஏன் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையில் கேள்விகளை எழுப்பிவந்தனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார், இந்த அறிவிப்பை பலரும் விமர்சனம் செய்துவந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியான நபர்களுக்கு கூறுவது நியாயம் இல்லை என சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து இன்று கூடிய சட்டமன்ற கூட்ட தொடரில் இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் அதே சமயத்தில் அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியானவர்களுக்கு மட்டும் என்று கூறுவது சரியல்ல, எனவே தேர்தல் அறிக்கையில் கூறியது போல அனைவருக்கும் வழங்க வேண்டும் என கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசு அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது.