அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்?

Photo of author

By Parthipan K

அனாதை தலைவர் ராமதாஸ் என்று கடுமையாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு விக்கிரவாண்டி தேர்தலில் பாடம் கற்பிப்பார்களா வன்னியர்கள்?

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் சட்டசபைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது 3 தொகுதிகளிலும் நாளை வேட்புமனு தாக்கல் துவங்குகிறது அக்டோபர் 24 இல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த தேர்தல் அமையும் என்பதால் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதில் குறிப்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி அவர்கள் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார். இதனால் திமுகவிற்கு விக்ரவாண்டி தொகுதி காலியானது.

வன்னியர்கள் பெரும்பான்மையாக வசித்து வரக்கூடிய விக்கிரவாண்டி தொகுதி, முழுக்க முழுக்க விவசாய பெருமக்களை கொண்ட செல்வச்செழிப்பு மிக்க தொகுதியாகும். இந்த தொகுதியின் வெற்றி தோல்வி என்பது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களிடமே இருக்கின்றது. வேட்பாளர் தேர்வில் கூட வன்னியர் சமுதாயத்தை தவிர வேறு யாரையும் இங்கு வேட்பாளராக நிறுத்த அதிமுக திமுக கட்சிகள் தயங்கும். 100% வன்னியர்கள் மட்டுமே இங்கு வேட்பாளராக நிறுத்த முடியும் என்ற நிலையில் தான் தற்போதைய சூழ்நிலை உள்ளது.

கட்சிகளின் பலம் குறித்து விக்கிரவாண்டி தொகுதியில் எடுத்துக்கொண்டால் அதிமுக திமுக இவர்களுக்கு ஈடாக பாட்டாளி மக்கள் கட்சியும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக இங்கு 41 ஆயிரம் வாக்குகள் பெற்றது. 1987ல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களில் பனையபுரமும் ஒன்று. இந்த கிராமமும் விக்கிரவாண்டியில் தான் இருக்கிறது. உயிரிழந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வன்னியர் சங்கம் சார்பாக வீரவணக்கம் ‌இங்கு நடைபெறுவது வழக்கம்.

மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.ராதாமணி அவர்களும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான், இதனால் திமுக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரை தான் உறுதியாக நிறுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து கூட அக்கட்சியில் இருக்காது, விழுப்புரம் திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி, கடந்த இரண்டு மாதங்களாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டங்களை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வருகிறார். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் வன்னியர்களின் ஆதிக்கம் உள்ள தொகுதி என்று.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் விக்கிரவாண்டி தொகுதியில் முன்னிலை பெற்றார். இது திமுகவிற்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை வன்னியர் வேட்பாளர் தான் நிறுத்துவார்கள். ஏனென்றால் அமைச்சர் சி.வி.சண்முகம் வன்னியர் சமுதாயம். பக்கத்து தொகுதி விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர். தொகுதியில் செல்வாக்கு பெற்றவர். மேலும் கூட்டணி கட்சியான பாமகவின் செல்வாக்கு போன்றவை அதிமுகவிற்கு கூடுதல் பலம். அமைச்சரின் உறவினர் தான் இங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் உள்ளூர் பிரமுகர்களையே நிறுத்த அமைச்சர் சண்முகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேட்பாளர் தேர்வு விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சண்முகத்திடமே ஒப்படைத்து விட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்ரவாண்டி தொகுதியில் அண்ணா திமுக வெற்றி பெற்றால் அரசு மீது இருக்கும் விமர்சனங்கள் முறியடித்து எடப்பாடி அவர்கள் செயல்படுகிறார் என்று அக்கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கடலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் திரு ராமதாஸ் பற்றிய கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “அனாதை தலைவர்” என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் பேசினார். இது பாமகவினருக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது, விக்கிரவாண்டி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் துணை அமைப்பான வன்னியர் சங்கமும் மிக பலமான செல்வாக்கு பெற்றிருப்பதால், மு.க. ஸ்டாலின் என்னதான் சுழன்று செயல்பட்டாலும், திமுகவை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏற்கனவே உறுதி ஏற்றுள்ளதாக அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் ராமதாஸின் சொந்த மாவட்டம் என்பதால் அவர் நேரடியாகவே இங்கு களமிறங்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்புமணி ராமதாசும் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு இரண்டும் பணத்தை வாரி இறைக்க தயாராகும் என்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள மக்களுக்கு திருவிழாக் கோலம்தான் என்பதில் ஐயமில்லை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.