நாம் தமிழர் கட்சிக்கு எதிரி திமுகவா? பாமகவா? விக்கிரவாண்டி வேட்பாளர் அபிநயா பேச்சால் வெளியான சூழ்ச்சி
ஒரு சில தினங்களில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அந்த வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆளும் திமுகவின் சார்பில் அன்னியூர் சிவா வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியின் சார்பில் பாமக வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா போட்டியிடுகிறார்.
இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையானது ஜூலை 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்து விட்டதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. சுயேச்சைகளுடன் சேர்த்து மொத்தமாக 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவு நெருங்கி வருவதால் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக தேர்தலை புறக்கணித்த நிலையில் அக்கட்சியினர் வாக்குகளை கவர பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டி போடுகின்றன.
இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அபிநயாவின் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏற்கனவே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அதை குறிப்பிட்டு பேசிய அவர் பாமக அங்கு வெறும் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாகவும், ஆனால் அவர்கள் தோற்க காரணமாக இருந்த வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றதாகவும் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சானது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இவரின் பேச்சை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி எதிர்ப்பது பாமகவையா? திமுகவையா? இவர்கள் யாருக்காக கட்சி நடத்துகிறார்கள். தமிழர்கள் நலனுக்காக கட்சி நடத்துவதாக மேடைக்கு மேடை பேசும் சீமான் சக தமிழர்களின் கட்சியான பாமகவை தோற்கடிக்க தான் அவ்வளவும் பேசினாரா? சீமானின் நோக்கம் திமுக வெற்றி பெறுவது தானா? என கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
சமீப காலங்களில் நாம் தமிழர் கட்சி திமுகவின் பி டீம் என்று விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அபிநயாவின் பேச்சு அதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.