8 கி.மீ. சாலை அமைப்பதால் 80 கி.மீ. சுற்றிவர தேவையில்லை! அதிகாரிகள் காலில் விழுந்து கதறிய மக்கள்!

Photo of author

By Parthipan K

பாலக்காடு அருகே சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய அதிகாரிகளின் காலில் விழுந்து ஆதிவாசி மக்கள் கண்ணீர் வடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில், பரம்பிக்குளம் வனப்பகுதியில் செம்மனாம்பதி ஆதிவாசி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு, கேரளாவில் இருந்து வாகனங்கள் வர வேண்டும் என்றால் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் வர வேண்டும். ஆனால், செம்மனாம் பகுதியில் இருக்கும் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தினால், 8 கிலோ மீட்டர் தூரத்திலே பரம்பிக்குளம் அருகே உள்ள தேக்கடி-க்கு செல்ல‌ முடியும். இதனை வலியுறுத்தி சாலை வசதி கேட்டு பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ஆதிவாசி கிராம தலைவர் ராமன் குட்டி தலைமையில், செம்மனாம் பகுதியில் இருந்து தேக்கடி-க்கு 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மண் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஆதிவாசி மக்கள் மண் சாலை அமைக்கும் பணியை தொடங்கினார். இந்த தகவலை அறிந்த கேரள வனத்துறை அதிகாரிகள், நெம்மாறை வனத்துறையினர், மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஆதிவாசி மக்கள் அங்கு இருந்த அதிகாரிகளின் காலில் விழுந்து, எங்களுக்கான தேவையை நாங்களே பூர்த்தி செய்து கொள்ள அனுமதி வேண்டும். இந்த 8 கிலோ மீட்டர் மண் சாலை அமைப்பதால் 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர தேவையில்லை என்று கூறி கதறி அழுதனர். இதனால் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளான அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் கூறுகையில், மண் சாலை அமைக்க எந்தவித தடையும் இல்லை. ஆனால், அரசாங்கத்திடம் இருந்து முறையாக அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மாதம் காத்திருந்தால், 100 நாள் வேலை திட்டத்தில், அந்த மக்களே சேர்ந்து சாலை அமைப்பதற்கான கூலியும் கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார்.