தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்! இருவரின் மண்டை உடைப்பு கன்னத்தில் பளார் விட்ட கே எஸ் அழகிரி என்ன நடந்தது?

Photo of author

By Sakthi

கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதன் பின்பு தொடர்ந்து 10 வருடங்கள் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது.

ஆனால் அந்தக் கட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சோனியா காந்தி குடும்பத்தின் கை பாவையாக திகழ்ந்தார் என்று இந்தியா முழுவதும் விமர்சனங்கள் எழுந்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சி சோனியா குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது என்றும் பலர் தெரிவித்து வந்தார்கள். அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் உள் கட்சி தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த கே எஸ் அழகிரி, தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோரை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், பணத்தை வாங்கிக் கொண்டு மாவட்ட புதிய நிர்வாகிகளை அவர் நியமனம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து மூத்த நிர்வாகிகள் கூட்டம் முடிவடைந்த பிறகு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் கூட்டம் முடிவடைந்து வெளியே வந்த கே எஸ் அழகிரி பேச்சு வார்த்தை நடத்தாமல் காரில் புறப்பட முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் காரை முற்றுகையிட்டனர்.

இவர்களுடைய முற்றுகைக்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. உருட்டு கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் மோதி கொண்டதில் 3 பேருக்கு தலையில் காயம் உண்டாகி ரத்தம் கொட்டியது.

இதனை அடுத்து அந்தப் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

இந்த சூழ்நிலையில், கூட்டத்தை விளக்க முயற்சி செய்தபோது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் இருவரின் கன்னத்தில் கே எஸ் அழகிரி அறைந்தார். தொண்டர்களை அழகிரி அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு நடுவே மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை என்று தெரிவித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரூபி மனோகரனின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினரே எரிக்க முயற்சி செய்தனர்.

நாங்குநேரியில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், அரசு பேருந்துகள் ஊருக்குள் வராமல் புறவழிச் சாலையில் மட்டுமே இயக்கப்படுவது தொடர்பான கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை என்றும் தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இணைந்து போராட்டம் நடத்தினர்.