அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களே சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரியதற்கு நல்லகண்ணு நேரில் சென்று வாழ்த்து!
சென்னை அருகே உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை அரசின் உதவியை எதிர்பார்க்காமல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமே இணைந்து நேற்று தூர் வாரினார்கள். இதனையறிந்த இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் தேங்கும் நீர், சுற்றுப் பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. இவ்வாறு நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்தது நாளடைவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஏரியை முறையாக பராமரிக்காததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பை இந்த ஏரியில் கொட்டப்பட்டு நீர் தொடர்ந்து மாசடைந்து வந்தது.
மேலும், ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து, தூர்ந்தும் காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி பலர் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள், கடைகளை கட்டியுள்ளதால் 60 ஏக்கர் பரப்பளவில் ஏரி குறுகியுள்ளது.
தற்போது, கோடை காலம் என்பதால் ஏரி வறண்டு காணப்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலத்திற்குள் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், சிட்லப்பாக்கம் பகுதி மக்கள் 500 பேர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணியை தாங்களாகவே தொடங்கினர். முதற்கட்டமாக, நீர்பிடிப்பு பகுதியில் உள்ள குப்பையை அகற்றி, பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”மிகப்பெரிய பரப்பளவில் உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை பராமரிக்க அதிகாரிகள் பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தூர்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியவில்லை.
இதனால், நிலத்தடி நீர் குறைந்து, வீடுகளின் கிணறுகளில் தண்ணீர் வறண்டுள்ளது. எனவே, இந்த வருடமாவது ஏரியை தூர்வாரும்படி கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் தூர்வாரும் பணிகளை நாங்களே செய்து கொள்கிறோம் என்று அவர்களிடம் அனுமதி கேட்டோம். அதற்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள். இதனையடுத்து இப்பகுதி பொதுமக்களை ஒன்றிணைத்து நாங்கள் முதல் கட்டமாக ஏரியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். வரும் வாரங்களில் ஏரியை தூர்வாரும் பணிகளை துரிதமாக செய்ய உள்ளோம். எங்களுக்கு உதவ சில தனியார் தொண்டு நிறுவனங்களும் முன் வந்துள்ளன. பொதுமக்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி பணிகளை தொடங்கியுள்ளோம். சிலர் ஏரியை தூர்வார பொக்லைன் இயந்திரத்தை இலவசமாக வழங்கியுள்ளனர். விரைவில் இந்த ஏரியை முழுமையாக தூர்வாரி சீரமைப்போம்” என்றனர்.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.