விமான விபத்துக்கு காரணம் இதுதானா? விசாரணையில் வெளிவந்த தகவல்
நேபாளம் விமான விபத்தின் காரணம் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15ஆம் தேதி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான பணியாளர்கள் உட்பட 72 பேர் பயணம் செய்த அந்த விமானம் நேபாள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குச் சற்று முன்பாக விபத்திற்குள்ளானது. அதில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கபட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதற்கான முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரு என்ஜின்களும் செயல் இழந்ததால் விமானம் விபத்துக்குள்ளானது என்ற தகவல் தெரியவந்துள்ளது.
முதல் கட்ட தகவல் ஆனது தொழில்நுட்ப கோளாறுகளால் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கின்றன. இதையடுத்து விமானத்தில் உள்ள காக்பிட் குரல் பதிவு கருவி, மற்றும் ஃப்ளைட் தரவு பதிவு கருவிகள் என இரண்டையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். எஞ்சின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா? அல்லது தொழில்நுட்ப கோளாறா? என விரிவான விசாரணை செய்யப்பட்டு வருகிறது.