இந்திய அணி தற்போது இருக்கும் ஃபார்மில் எங்கு விளையாடி இருந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றி இருப்பார்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதனால் இந்திய அணிக்கு பல முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னணி வீரர்கள் இந்தியா ஒரே மைதானத்தில்( துபாய்) விளையாடியதே அவர்கள் சாம்பியன் பட்டம் வெல்லக்காரணம் என விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர வாசிம் அக்ரம் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ” சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுவதற்கு முன் இந்திய அணி, நியூசிலாந்திடம் 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும், இலங்கையில் ஒரு நாள் தொடரையும், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரையும் இழந்தது.
இதனால் அந்த அணி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்தியா சாம்பியன்ஸ் டிராபி பட்டம் பெற வாய்ப்பே இல்லை என்று எல்லாம் அப்போது கூறினர்.
அதிலிருந்து மீண்டு தற்போது ரோகித் தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். அவர்கள் துபாயில் மட்டும் இன்றி பாகிஸ்தானில் விளையாடிருந்தாலும் சாம்பியன் பட்டத்தை வென்று இருப்பார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றது. அதிலும் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை யாரும் மறக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.