ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? அறிந்து கொள்ள புதிய வழி
ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பது குறித்து இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆண்டு தோறும் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கான ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார் தெரிவித்தும் அரசால் இதை முறைப்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 21, 22 மற்றும் 23 ஆம் தேதிகளிலும் பெரும்பாலான பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.3000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்று இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பேருந்துகள் வசூலித்தால் இது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.