களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்.
கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடத்திற்கு 2,613 வேட்பாளர்கள் மோத உள்ளனர். ஆளும் கட்சியான பாஜக 224, காங்கிரஸ் கட்சி 223, ஜனதா தளம் எஸ் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பலத்த போட்டி நிலவுகிறது.இதற்காக இந்த இரு கட்சிகளின் முன்னனி தலைவர்கள் தங்களது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
வருகின்ற மே 10- ம் தேதி தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், வழக்கம் போல அனைத்து கட்சிகளும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த இரு நாட்களாக பிரசாரம் செய்கிறார். பெலகாவி, பாகல்கோட் பகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கர்நாடக பிரச்சாரத்தில் பேச்சாளர்களாக களமிறக்க உள்ளனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகல்கோட்டில் பிரச்சாரத்தின் போது பேசிய அமித்ஷா இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு எம்எல்ஏவைத் தேர்ந்தெடுப்பதற்காக மட்டுமல்ல, மாநிலத்தின் எதிர்காலத்தை பிரதமர் மோடியின் கைகளில் ஒப்படைப்பதற்காகவும் தான்.
கர்நாடகாவை வளர்ந்த மாநிலமாக மாற்றுவதுடன், நல்ல அரசியலையும் கொண்டு வருவதற்கான தேர்தல் இது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் ஏற்படும். குடும்ப அரசியல், கலவரங்கள் நடக்கும். ஜனதா தளம் கட்சிக்கு நீங்கள் வாக்களிப்பது என்பது உங்கள் வாக்கை காங்கிரசுக்கு அளிப்பதாகும்.
கர்நாடகாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக நீங்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என கூறியுள்ளார். மேலும், வரும் ஏப்ரல் 29ஆம் தேதி பிரதமர் மோடி கர்நாடகவிற்கு வருகை தரும் நிலையில், அவருடைய தலைமையில் மெகா தேர்தல் பிரச்சாரத்திற்கு பாஜக தயாராகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.