என்னது.. எனக்கும் பும்ராவுக்கும் மனகசப்பா…? மனம் திறந்து பேசிய முகமது ஷமி!
பும்ரா, சிராஜ் உள்ளிட்ட வீரர்களுடன் எனக்கு எந்த ஈகோவும் இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது.
இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளன. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மீண்டும் ஒன்றாக இணைந்து பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான், இந்தியா அணிகள் மோத இருப்பதால் உலக ரசிகர்களிடயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பும்ரா, சிராஜ் உள்ளிட்ட வீரர்களுடன் எனக்கு எந்தவித ஈகோ கிடையாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த சூழ்நிலையிலும் பந்தை வீச தயாராக இருக்கிறேன். பந்து வீசுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை. அதேபோல் எனக்கு பும்ரா, சிராஜூடன் எந்த ஈகோவும், மனகசப்பும் இல்லை.
இவர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். யார் விளையாட்டில் பங்கேற்பார்கள் என்பதை நிர்வாகம் முடிவு செய்யும். என் இலக்கு எப்போதும் களத்தில் 100 சதவிகிதத்தை கொடுப்பதுதான். அதில்தான் நான் கவனம் செலுத்தி வருகிறேன். எங்கள் அணியில் நல்ல திறமையான பவுலர்கள் இருக்கிறார்கள். அதைப் பற்றி நான் அதிகம் யோசிக்க வேண்டியது இல்லை. கவனம் சிதறாமல் சரியான திட்டம் வகுத்து விளையாடி ஜெயிக்க வேண்டும் என்றார்.